முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

உலக செய்திகள்

சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்று ஒரு காலத்தில் பெருமை கொண்டிருந்த பிரித்தானிய தேசத்தில், சத்திய இஸ்லாத்தின் ஆன்மிக ஒளியை ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 5000 பேர் அடைந்து வருகிறார்கள். அதில் பெரும்பாலோர் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண உறவுகளின் வாயிலாக இந்த மனமாற்றங்கள் நிகழுவதாகக் கருதப்படும் பொதுஜனக் கருத்தோட்டத்திற்கு மாறாக இஸ்லாமிய விழுமியங்களின் ஈர்ப்பே இந்த மனமாற்றத்திற்குப் பெரிதும் காரணமாக அமைவதாகக்  கல்வியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆம் அவை மணமாற்றங்களல்ல; மனமாற்றங்களே என்பது ஆய்வுகளின் வழியே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, இஸ்லாமிய நற்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு முஸ்லிமான ஒரு பெண்மணி லாரன் பூத். பிரிட்டிஷ் தேச வானொலியில் ஒலிபரப்பாளர். ஊடகவியலாளர், மனித உரிமைப் போராளி  போன்ற பன்முகங்களைக் கொண்ட லாரன்பூத், இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் ஒன்று விட்ட மைத்துனி.

தற்போது, 'இஸ்லாத்தை நோக்கிய பயணம்  (Journey to Islam)' என்கிற நூலை எழுதுவதில் முனைப்பாக இருக்கும்  லாரன்பூத், தனது நூலில் பல சுவாரசியமான நிகழ்வுகளைக் குறிப்பிட உள்ளார்.

டெய்லி மெயில் எனும் ஏட்டில் "இஸ்லாத்தை நேசிப்பது ஏன்?" என்ற தலைப்பில் கட்டுரை எழுதிய லாரன்பூத், அதில் தனது ஃபலஸ்தீனிய முதலாவது பயணம் பற்றி குறிப்பிடுகிறார். ஜியோனிசம், தன் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்ரமித்துள்ள ஃபலஸ்தீனில் இஸ்லாம் தன் கொள்கைக் கரங்களால் எவ்வாறு தன்மை அரவணைத்தது என்று அதில் அவர் எழுதியிருந்தார்.

"மத்தியக் கிழக்குக்கு நான் பறந்தபோது, என் மனத்தில் குறிப்பிட்ட சில சொற்களே திரும்பத் திரும்ப வலம் வந்தன. 'அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், வெறியர்கள், கட்டாயத் திருமணங்கள், தற்கொலை குண்டு வெடிப்புகள், ஜிஹாத்' என்று ஊடகங்களில் பிம்ப உருவாக்கமாகப் பதிவு செய்யப்பட்ட  சொற்களையே ஜம்பமாக திரும்பத் திரும்ப மனம் நினைத்தது. ஆனால் அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவம் முற்றிலும் வேறாக இருந்தது. குறிப்பாக ஃபலஸ்தீனியப் பெண்களின் பெருந்தன்மையான விருந்தோம்பல், நல்லுணர்வுகள், இரக்க குணங்கள், அன்பு ஆகியவற்றை அங்கே முற்றிலும் புதிதாக  உணர்ந்தேன். மெல்ல மெல்ல இஸ்லாத்தின் வலிமைக் கரங்கள் என்னை அரவணைத்துக் கொண்டன".

"அடுத்த மூன்றாண்டுகளில் பணியின் பொருட்டு, பன்முறை ஃபலஸ்தீன் செல்ல நேர்ந்தது. முதலில் பணிநோக்கமே பிரதானமாக இருந்தது. நாளடைவில் 'மாஷா அல்லாஹ், அல்-ஹம்துலில்லாஹ்' ஆகிய இறைச் சொற்களை நானும் என்னையறியாமலேயே சொல்லத் தொடங்கியிருந்தேன். ஃபலஸ்தீனில் நான் உணர்ந்த அன்பும் அரவணைப்பும் முஸ்லிம் குழுக்களை 'நடுக்கத்துடனே' சந்திக்கச் சென்ற என் மனநிலையை பெரிதும் மாற்றி, அக்குழுக்களைச் சந்திப்பதில் ஆர்வங் காட்டத் தொடங்கியிருந்தேன்” என்கிறார் லாரன்.

"மனித உரிமை ஆர்வலராக  இருக்கும் என்னுள்  ஃபலஸ்தீன் என்னும் ஆக்ரமிப்பு பூமி புதிய  தாக்கங்களை ஏற்படுத்தியது. மத்தியக் கிழக்கில் இருந்த பெரும்பாலான காலத்தில்  பள்ளிவாசல்களுக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டேன். உண்மையில் எனக்குச் சுற்றுலாதான் நோக்கமாக இருந்தது அப்போது. ஆனால் அந்தப் பள்ளிகள் என்னை ஈர்த்தன.  இஸ்லாத்தை  வெளியிலிருந்து சுற்றிப் பார்க்க வந்தவளாக இனியும் இருக்க முடியாது என்று நன்கு புலப்பட்டது. நம்பிக்கையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தி கொண்ட  இஸ்லாத்தை நன்குணர்ந்துகொள்ள அதன் உள்ளுக்குள் பிரயாணிக்க வேண்டும்  என்று தோன்றியது".

"என்றாலும், முதலில் என்னை நானே கேள்விகள் கேட்டுக்கொண்டேன்.  என்ன இது? இஸ்லாத்தை நோக்கி ஏன் எனக்கு இந்த மனமாற்றம்?  என்னுடைய குடும்பத்தினரும், நண்பர்களும் என்ன நினைப்பார்கள்?  என்னுடைய குணநலன்களை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள, மாற்றிக்கொள்ள முடியுமா?  - இப்படி பல கேள்விகள்" என்கிறார் லாரன்பூத்.

இங்கிலாந்துக் குடும்பங்களில் ஆல்கஹால் ஏற்படுத்திய பாதிப்புகளை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்த லாரன்பூத்துக்கு, இஸ்லாத்தில் நுழைந்து ஆல்கஹாலைக் கைவிடுவதில் தயக்கம் இருக்கவில்லை. லாரனுக்குத் தந்தையின் குடிப்பழக்கம் ஏற்படுத்தியிருந்த ஆழமான காயத்துக்கு மருந்தாகவே இஸ்லாம் அறிமுகப்படுத்திய 'மதுமறுப்பு' அமைந்தது.

ஒருமுறை பள்ளிவாசல் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்த லாரனுக்கு  ஒரு சக்திவாய்ந்த உணர்வுப் பெருமிதம்  ஏற்பட்டது. 'நான் முஸ்லிம் தான்' என்பதை உளப்பூர்வமாக  உணர்ந்த தருணம் அது' என்கிறார் லாரன்.   இலண்டன் திரும்பிய லாரன் பூத் உடனடியாக இஸ்லாமிய கோட்டையின் திறவுகோலான 'கலிமா' எனப்படும் இறைச்சொற்களை மொழிந்து முஸ்லிம் ஆகியுள்ளார், அல்லாஹு அக்பர்!

பிந்தைய தன் கட்டுரைகளில் லாரன் தனது உற்சாக உணர்வை, சில முஸ்லிம்களின் செயல்கள் சீர்குலைக்க முயன்றன என்றும் கூறியிருக்கிறார். பிறவி முஸ்லிம்களாக இருக்கும் முஸ்லிம்கள் சிலரின் செயல்களைப் பார்த்து சற்றே ஏமாற்றமடைந்ததாக லாரன்பூத் குறிப்பிடுகிறார். ஆனாலும் அவர் தெளிவாகவே இருந்தார்.

{youtube}kAqAqOfwdU0{/youtube}

"அது இஸ்லாம் அளித்த ஏமாற்றமன்று; இஸ்லாம் ஒரு பரிபூரணமான வழி - ஆனால் பெயரளவிலும் பிறப்பளவிலும் முஸ்லிம்களாக இருக்கும் சிலரின் செயல்களுக்கு இஸ்லாம் எப்படி பொறுப்பாக முடியும்?" என்று அவர் குறிப்பிட்டார்.

"என் நல்ல முஸ்லிம் நண்பர்கள் இதனை எனக்கு அழகாகவே சுட்டியிருந்தனர்" என்று குறிப்பிட்ட லாரன், "On Islam" என்னும் இணைய இதழில் 'Down to Earth with a Bump' என்னும் கட்டுரையில்,  தான் ஃபலஸ்தீனிய முஸ்லிம் இல்லங்களில் கற்றதும் பெற்றதுமான அன்பை, பொறுமையை, பெருந்தன்மையை, விருந்தோம்பலை, மனித நேயத்தை, குழந்தை வளர்ப்புப் பண்பியலை வியந்து நினைவு கூர்ந்துள்ளார்.

தனது ஏமாற்றமாக லாரன் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது:  "கடந்த வருடத்தின் பிப்ரவரியில் என்னைச் சுற்றியிருந்த முஸ்லிம்களில் பலர் உண்மையிலேயே முஸ்லிம்களாக இல்லை.  பலரும் பொய்யர்களாக, குடிகாரர்களாக, ஏமாற்றுபவர்களாக, சிறிய பெரிய பாவங்களை மனச்சஞ்சலமின்றி செய்யக் கூடியவர்களாக இருக்கக் கண்டு அதிர்ந்தேன்"

"இஸ்லாத்தைப் பின்பற்றாத முஸ்லிம்கள்தாம் இஸ்லாமிய சமூகத்தின் சிக்கல் என்பதை உணர்ந்துரைக்கும் லாரன்பூத், இஸ்லாமிய தியானங்களில் மூழ்கி விடுவதுதான் ஒரு பாதுகாப்புக் கவசமாக , நினைவூட்டலாக, பாவத் தடுப்பாக அமைகிறது" என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

"இஸ்லாத்தைத் தனது வாழ்க்கைநெறியாக பரிபூரணமாகவும், அனைத்திலுமாக ஏற்றுக் கொண்ட ஒருவரால் தனது தொழுகையை  எப்படிக் காலந்தாழ்த்த முடியும்?" என்ற லாரனின் ஓங்கி அடிக்கும் கேள்வி முஸ்லிம் பலரின் காதில் விழுகிறதோ இல்லையோ, கன்னதிலும் மனதிலும் விழவேண்டியது எனலாம்.

"நம்மில் பலருக்கும் தொடக்கத்தில் தொழுகைகள் எல்லாம் மிகவும் பயபக்தியுடன் அமைகின்றன. பிறகு அலட்சியம் நுழைந்து தொழுகையின் கடைசி நேரத்தில் 'கடமைக்காக' நிறைவேற்றுகிறோம். நாளடைவில் பாருங்களேன், 'ஃபஜர் (அதிகாலைத் தொழுகை)' என்பதை, ‘அலுவலகம் செல்வதற்கு முன்பு நிறைவேற்ற வேண்டிய ஒன்று’ என்ற அளவுக்கு மாற்றி விடுகிறோம்" என்று நயமாக விமர்சிக்கிறார்.

இஸ்லாத்தை சரியாகப் பின்பற்றாமல் சரிவு கண்டுவரும் முஸ்லிம்களைப் பார்த்து ஆதங்கம் கொண்டாலும்,  இஸ்லாமிய சமூகத்தில் ஒருத்தியாக தன்னை இணைத்துப் பிணைத்துக் கொண்டதில் பெருமிதமே அடைகிறார் லாரன்பூத். "நம்முடைய கிராம சமுதாய அமைப்புகளில் நம்பிக்கைக் கீற்றுகள் புலப்படுகின்றன" என்கிறார் லாரன்.

"அல்லாஹ்வின் மீதான அன்பினால் வறியவருக்கும் அநாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிக்கின்றனர். மேலும், 'நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை"  என்று திருமறை குர்ஆனின் (76 : 8 - 9 ) வசனங்களை ஓதிக் காட்டுகிறார்.

இஸ்லாமிய சமூகத்திற்கு வெளியே உள்ள மக்களைப் பார்க்கும்போது இஸ்லாமிய சமூகம் மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவே இருக்கிறது என்கிறார் லாரன்பூத். "நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்வதில் இருக்கிற பிணைப்பு அபாரமானது" என்கிறார்.

தனது உரையில் முத்தாய்ப்பாக லாரன்பூத் எழுப்பியிருக்கும் கேள்வி முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய ஒன்று: 'முஸ்லிமாக(ப் பெயரளவில்) இருந்தபடி, இஸ்லாத்தை ஏற்று நடக்காமல்,  மற்றவர்களை இஸ்லாத்தை விட்டு நமது நடத்தையால் வெளியே தான் வைக்கப் போகிறோமா? அல்லது இஸ்லாம் கூறும் வாழ்க்கையை வாழ்வதன் மூலம் மற்றவர்களையும் இஸ்லாமிய நல்வழிக்கு ஈர்க்கப் போகிறோமா?'

'நம்முடைய நடத்தைகளும், குணங்களும் இஸ்லாம் என்கிற மகத்தான நல்வழியைப் பிரதிபலிக்கிறதா?' - ஒவ்வொரு முஸ்லிமுக்குமான இந்தக் கேள்வியுடன் தனது கட்டுரையை முடிக்கிறார் லாரன் பூத்.

இப்னு ஹம்துன்